Menu

Video

0 Comment

Aandavan kattali

Categories: 

கதாநாயகன்-கதாநாயகி: விஜய் சேதுபதி-ரித்திகா சிங்.

டைரக்‌ஷன்: எம்.மணிகண்டன்.

தயாரிப்பு: ஜி.என்.அன்புசெழியன்.

கதையின் கரு: தவறான சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் எடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்.

விஜய் சேதுபதி, மதுரை பக்கமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். குடும்பத்தில் கஷ்டம். நிறைய கடன்கள். வெளிநாடு சென்று வேலை பார்த்தால், குடும்ப கஷ்டங்களும், கடன்களும் தீரும் என்ற முடிவுடன், பாஸ்போர்ட் எடுப்பதற்காக சென்னை வருகிறார். லண்டன் போய் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்துடன் அவர் பாஸ்போர்ட் எடுக்கப் போகும்போது, போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தரகர் கும்பலிடம் சிக்குகிறார். திருமணம் ஆகாத அவருக்கு திருமணம் ஆனது போலவும், மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுகிறார்கள். இந்த தவறு தொடர்ந்து பல தவறுகளை செய்ய வேண்டிய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. மனைவி கார்மேக குழலியை விவாகரத்து செய்தது போல் சான்றிதழை பெற வேண்டிய நிலையை உருவாக்குகிறது.

கார்மேக குழலி என்ற பெயரில் டி.வி. நிருபர் ரித்திகாசிங் இருக்கிறார். அவரை சந்தித்து, குடும்ப நல கோர்ட்டில் தனது மனைவியாக நடிக்கும்படி விஜய் சேதுபதி கேட்கிறார். முதலில் மறுக்கும் ரித்திகாசிங், ஒரு கட்டத்தில் அதற்கு சம்மதிக்கிறார். கோர்ட்டில், இரண்டு பேரையும் ‘கவுன்சிலிங்’ போகும்படி நீதிபதி உத்தரவிடுகிறார்.

இந்த நிலையில், போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்ற விஜய் சேதுபதியின் நண்பர் யோகிபாபு அங்கு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். இது தொடர்பாக விஜய் சேதுபதியை தேடி, குடியுரிமை அதிகாரிகள் வருகிறார்கள். ரித்திகாசிங்கிடமும் விசாரணை நடக்கிறது. இருவரும் அதிகாரிகளின் பிடியில் சிக்குகிறார்களா, இல்லையா? என்பது மீதி கதை.

யதார்த்தமான கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் அப்படி பொருந்துகிறார், விஜய் சேதுபதி. நடை, உடை, பாவனைகளில் சராசரி கிராமத்து மனிதரை கொண்டு வந்து விடுகிறார். திருமணம் ஆகாத அவர் திருமணம் ஆனதாக பொய் சொல்லி வாடகை வீடு பிடிப்பதும், பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் கார்மேக குழலி என்று பொய்யாக குறிப்பிடுவதும், சரளமாக பேச வராதவர் போல் ரித்திகாசிங்கிடமும் நடிப்பதும், தமாசான காட்சிகள்.

துணிச்சல் மிகுந்த டி.வி. நிருபராக ரித்திகாசிங். இவரும், விஜய் சேதுபதியும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அமைச்சரை எதிர்த்து ரித்திகாசிங் கேள்வி எழுப்புகிற இடமும், கோர்ட்டில் அவர் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்கும் காட்சியும், அழுத்தமானவை.

நாடக குழுவின் தலைவராக முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் வருகிறார். படத்தில் கலகலப்பூட்டுபவர், யோகிபாபுதான். அவர் வந்தாலே தியேட்டர் உற்சாகமாகிறது. குறிப்பாக, விஜய் சேதுபதிக்கு கிடைக்காத ‘விசா’ தனக்கு கிடைத்தது எப்படி? என்பதை யோகிபாபு விளக்கும் இடம், ஒரு உதாரணம். குடும்ப நல கோர்ட்டின் வழக்கறிஞராக வரும் ஜார்ஜும் தமாஷ் பண்ணுகிறார்.

நடிகையாக பூஜா தேவாரியா, வீடு தரகராக சிங்கம்புலி, போலி பாஸ்போர்ட் தயாரிப்பவராக எஸ்.எஸ்.ஸ்டான்லி, விஜய் சேதுபதியின் அக்காள் கணவராக ஏ.வெங்கடேஷ் ஆகியோர் வருகிறார்கள். குடியுரிமை அதிகாரியாக வரும் ஹரிஷ் பரேட், “இவர் யார்?” என்று கேட்க வைக்கிறார். இவருடைய கண்டிப்பான பார்வையும், வசன உச்சரிப்பும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கின்றன.

கே இசையில், எல்லாமே வசன நடை பாடல்கள். கதையுடன் ஒன்ற செய்கிறது, பின்னணி இசை. காட்சிகளுக்கு செயற்கை முலாம் பூசாமல் மிக இயல்பாக படமாக்கி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம்.

பாஸ்போர்ட் வாங்கும்போது தரகர்களிடம் சிக்காதீர்கள் என்ற கருத்தை யதார்த்தமான நடையில், மனதில் பதிகிற மாதிரி சொல்லியிருக்கிறார், டைரக்டர் எம்.மணிகண்டன். வாடகை வீடுகளின் அவலம், பெருகி வரும் விவாகரத்து வழக்குகள் போன்ற பிரச்சினைகளையும் சமுக அக்கறையுடன் அணுகியிருக்கிறார். படத்தின் ஒரே பலவீனம், மெதுவான கதையோட்டம். அதை சுவாரஸ்யமான காட்சிகளும், வசனங்களும் சீர்படுத்துகின்றன.
விஜய் சேதுபதியும், ரித்திகாசிங்கும் இணையும் அந்த கடைசி காட்சி, படத்தின் டைட்டிலுடன் கச்சிதமாக பொருந்தி விடுகிறது.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518