Menu

Article

0 Comment

லாரி ஓட்டுநர்களிடம் அடாவடி வசூல் செய்யும் பெண் ஆய்வாளர்கள்! துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Categories: 

வேலூர் மாவட்டம், காட்பாடி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு காட்பாடி அடுத்த மெட்டுகுளம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக இருவழித்தடத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், சுற்றுலா வேன்கள், கார்கள் என்று பல வகையான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையை செலுத்திவிட்டு செல்ல வேண்டியதுதான் முறைப்படியான செயலாகும். ஆனால் இப்படி இவர்களை அவ்வளவு எளிதில் செல்லுவதற்கு காட்பாடி வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விடுவதில்லை. மாறாக எந்த வாகனமோ, அதை பொறுத்து ‘ப’ வைட்டமின்களை அதாவது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டுதான் அனுப்புகின்றனர்.

இதில் ஆண் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் இங்கு பணிபுரியும் பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்களான திண்டிவனம் வசந்தி, மதுரை மாலதி, சுப்புரத்தினம் ஆகியோர்தான் அடாவடியாக வசூல் செய்கின்றனர். ஒரு லாரி வந்துவிட்டால் போதும் ரூ.5 ஆயிரத்தை கறக்காமல் விடுவதில்லை. இப்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக பல லாரிகள் அந்த சோதனைச் சாவடி எதிரில் 2 முதல் 3 நாட்கள் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. பணம் கொடுத்தால்தான் லாரிகள் விடுவிக்கப்படுகின்றன. இந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களான வசந்தி, மாலதி, சுப்புரத்தினம் மீது வேலு£ர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர்களும் சரியான நேரத்துக்காக காத்திருக்கின்றனர். இந்த 3 பேரையும் போக்குவரத்து துறை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் நாள்தோறும் நடத்தும் கெடுபிடிகள், அறுவெறுக்கத் தக்க வார்த்தைகளால் லாரி ஓட்டுநர்களை அர்ச்சனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு அளவில்லா அதிகாரத்தை வழங்கியது யார்? என்று தெரியவில்லை. இவர்கள் செய்யும் தவறுகளால் அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இதுபோன்று லாரி ஓட்டுநர்கள் படும் அவதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்:0416-2295549 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் யாரும் அவ்வளவு சீக்கிரம் எடுப்பதே இல்லை. செல்போனில் மட்டுமே பேசி தீர்வு காணுகின்றனர். லாரி ஓட்டுநர்கள் தாங்கள் காட்பாடி சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து தங்கள் லாரி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் நேரில் காட்பாடி வந்து இந்த பெண் ஆய்வாளர்களிடம் லஞ்ச பணத்தை கொடுத்த பிறகுதான் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளை விடுவிக்கின்றனர்.

இப்படி அடாவடியாக அராஜக போக்குடன் போக்குவரத்து ஆய்வாளர்கள் நடந்து கொள்கின்றனர். இது ஆரோக்கியமானதாக இல்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க பெண் உதவியாளர் ரூ.16 லட்சம் கொடுத்து விட்டு இந்த சோதனை சாவடியில் பணிக்கு வந்துள்ளதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டில் பணம் எடுக்க இயலாத சூழ்நிலையில் கூட அடாவடி வசூல் காட்பாடியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பிச்சைக்காரர்கள் போல நடந்து கொள்கின்றனர் என்றுதான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதுகுறித்து விசாரித்தால் நாங்கள் தலா ரூ.60 லட்சம் கொடுத்துவிட்டுதான் இந்த பணிக்கு வந்துள்ளோம். தினமும் வசூலித்தால் மட்டுமே நாங்கள் செலுத்திய பணம் திரும்ப எங்களுக்கு கிடைக்கும் என்று நியாயம் கற்பிக்கின்றனர் மோட்டார் வாகன ஆய்வாளர்களாக பணியாற்றும் வசந்தி, மாலதி, சுப்புரத்தினம்.

இவர்கள் அடுத்து கூறும் காரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் வசூல் செய்யும் பணத்தை நாங்களே எடுத்து கொள்வதில்லை, இங்கு பணியாற்றும் அனைவரும் பகிர்ந்து எடுத்து கொள்வதோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் சென்னையில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் வரை செல்கிறது என்று கூலாக கூறுகின்றனர். லஞ்சம் பெறுவதை கூட தைரியமாக இந்த 3 பெண் ஆய்வாளர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஏற்கனவே நசிந்துவரும் மோட்டார் வாகன தொழிலை இதுபோன்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேலும் நலிவடையச் செய்து வருகின்றனர். மனிதாபிமானமே இல்லாமல் இவர்கள் நடந்து கொள்வது சட்டத்தை மீறி செயல்படுவது யாருடைய பின்புலத்தில் என்பது தெரியவில்லை. ரத்தக் கண்ணீர் வடிக்கும் லாரி டிரைவர்களை இதுபோன்று கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி பணத்தை கறக்கும் பெண் ஆய்வாளர்கள் மீது போக்குவரத்து துறை, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போகிறதா? அல்லது 3 பெண் ஆய்வாளர்களையும் பணியிடை நீக்கம் செய்யப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518