Menu

Article

0 Comment

மேட்டூர் அணையில் தூர் வாருவதில் குளறுபடி! விவசாயிகளுக்கு திண்டாட்டம்!! அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்!!

Categories: 

தமிழகத்தின் ஜீவநதி காவிரியின் குறுக்கே கோடை மற்றும் வறட்சி காலங்களில் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்காகவும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளாக தூர்வாரப்பட வில்லை. மழை மற்றும் வெள்ளக் காலங்களில் அடித்து வரப்படும் மண் அணையில் படிந்து வந்ததால் அணையில் மொத்த கொள்ளளவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வண்டல் மண் படிந்து நீரின் கொள்ளளவை குறைத்து விட்டது. இதனால் வறட்சி காலங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைந்து விட்டது. அணையின் நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை தூர் வார வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல் இதர விவசாயிகளனைவருமே கோரிக்கையை பலமுறை வைத்தனர்.

ஒருவழியாக இந்த முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மேட்டூர் அணையை தூர்வார நிதியை ஒதுக்கியும், அதனை செயல்படுத்திட உடனடியாக களமிறங்கிய அதிகாரிகளும் வண்டல் மண்ணை அளவீடு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்து பணியை துவக்கி வைத்து தமிழக வரலாற்றில் மேட்டூர் அணை பயனாளிகளின் வரலாற்றில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இத்துடன் இலவசமாக விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு முதல் நாளிலேயே வசூல் வேட்டை நடத்தியவர்களால் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளின் வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டார் என்று புகழாரம் தேடி வருகின்றனர் மேட்டூர் அணை சுற்று வட்டார விவசாயிகள்.

நம்மிடம் பேசிய உள்ளூர் விவசாயி ஒருவர் மண் எடுக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களனைத்தும் ஆளும் கட்சியினர் மற்றும் மணல் மாஃபியாக்களுடையது. இவர்கள் முதலில் வண்டல் மண்ணை எடுத்துவிட்டு கீழே படிந்துள்ள மணலை மாலை நேரங்களில் லாரிகளில் லோடு ஏற்றியதாக தகவலை கசிய விட்டார். மேலும் ஒரு ஏக்கருக்கு 30 யூனிட் வண்டல் மண் 20 நாட்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வண்டல் மண் எடுக்க அரசு அனுமதித்துள்ளது. அவ்வாறு மண் லோடு போனால் அது திருட்டு லோடு, பர்மிட் இல்லாத லோடு என வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம், அவ்வாறாக நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்றார்.

முதல் நாள் குழப்பத்தை தீர்க்க மறுநாள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில், அதிகாரிகளுடன் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குழப்பத்தை தீர்க்க வேண்டுகோள் விடுத்தனர். கடைசியில் அரசு அறிவித்தபடியே இலவசமாகவே வண்டல் மண் கொடுக்கப்படும் அளவும், அதற்க்காக மேட்டூர் அணை நீரை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மண் எடுக்கும் இயந்திரங்களுக்கான செலவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியுள்ளனர். குறிப்பிட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட பகுதி வண்டல் மண் எடுக்கும் இயந்திரத்திற்க்கான செலவை ஏற்றுக் கொள்ளும் படியாக உடன்பாடு செய்துள்ளனர்.

இதன் காரணமென்ன என்பதனை மேட்டூர் அணை தூர்வாரும் பகுதியில் வந்திருந்த தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதனை சந்தித்தோம். அவர் நம்மிடையே பேசுகையில்... முதல்வர் வெகு விமர்சியாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே விவசாயிகளிடம் ஒரு டிராக்டருக்கு தலா 100 ரூபாய் கேட்டனர். மேலும் இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது சரியான பதில் இல்லை எனவும், மேலும் வண்டல் மண்ணை அணையிலிருந்து இலவசமாக விவசாயிகளே எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துவிட்டு 100 கேட்டால் எப்படி என்ற சலசலப்பு முதல் நாளிலேயே துவங்கியது எனவும் இது ஒருபுறமெனில்... ஆளும் கட்சியினர் மட்டும் லாரிகளில் லோடு ஏற்ற அனுமதித்தனர் அதிகாரிகள் எனவும் இப்படி அதிகாரிகள் விவசாயிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல என்றார்.

தற்போது மேட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள அணையின் நீரை பயன்படுத்தும் தனியார் தொழிற்சாலைகள் ஒத்துழைப்புடன் அன்பளிப்பு மூலமாக தற்பொழுது தனியார் நிறுவனங்கள் அணையில் வண்டல் மண்ணை எடுப்பதற்க்காக பொக்லீன் செலவை கொடுக்க அதிகாரிகள் வற்புறுத்திய காரணத்தினால் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதை அரசே ஏற்று நடத்தினால் சிறப்பாக இருக்கும். தற்பொழுது இந்த வண்டல் மண் எடுப்பதாக கூறி பல செங்கல் சூளை ஆலைகள் மற்றும் மணல் மாஃபியாக்கள் கள்ளத்தனமாக மணல் எடுக்கிறார்கள். இதை அரசே ஒரு ஆய்வுக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்ல கூடிய அந்த செம்மண்ணுக்கு வேறு விலையை நிர்ணயிக்க வேண்டும். இது வியாபார நோக்கத்திற்காக செயல்படும் செங்கல் சூளைக்கு மண் அள்ளப்படுகிறது.

ஏரி அணை தூர் வாரப்படுகிறது என்ற பெயரில் நடக்கிறது. இதை அரசு ஒன்று விலையை மாற்றி நிர்ணயம் செய்ய வேண்டும். செங்கல் சூளைகளுக்கு லோடு 500 அல்லது 1000க்கு கூட அரசு விற்க்கட்டும். விவசாயிகளுக்கு கூடுமானவரையில் இலவசமாக கொடுக்க வேண்டும். மேட்டூர் அணை தூர் வாருவது, அணை கட்டிய 83 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. வண்டல் மண்ணை எடுப்பதினால் 10 சதவிதம் முதல் 20 சதவீதம் அதிக அளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்பதுடன், இந்த வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் 4 ஆண்டுகளுக்கு எவ்வித உறமும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்யலாம். எனவே இந்த மண்ணை அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கும் கூட கடத்திச் செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகள் மிகக் கவனமாக தமிழக விவசாயிகளின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518