Menu

Article

0 Comment

மீண்டும் மக்கள் வரிப்பணத்திற்கு வேட்டு வைக்கும் முயற்சியில் மதுரை மாநகராட்சி குடிநீர் பிரச்சனை தீருமா?

Categories: 

மதுரை மாநகராட்சியில் பல இடங்களில் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் இல்லாத நிலையில், மீண்டும் பல இடங்களில் ரூ.15 கோடி செலவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றது. இதுகுறித்து விசாரித்த போது, மதுரை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது வைகை மட்டுமே. இதில் உள்ள நீரின் அளவை வைத்தே மதுரையில் உள்ள 14.62 லட்சம் மக்களுக்கும் குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. இதற்காக மதுரை வைகை ஆற்றின் நடுநடுவே ஆழ்துளை கிணறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்காக அணைப்பட்டி முதல் மதுரை திருப்புவனம் வரை வைகை திட்டம் 1 மற்றும் திட்டம் 2 திட்டங்களின் மூலம் 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மதுரையின் பழைய 72 வார்டுகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தியதன் விளைவாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளுக்கு மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. தற்போதைய நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 22.20 அடியாகத்தான் உள்ளது.

இதை வைத்து மதுரைக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகரில் ஏற்கனவே 500 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க போடப்பட்ட திட்டத்திலேயே மாநகராட்சியால் 411 இடங்களில் மட்டுமே போட முடிந்தது. இதன் அருகே தண்ணீர் எடுக்க மோட்டார்கள் பொருத்தப்பட்டு அதனை தண்ணீர் தொட்டிகளில் நிரப்பி மாநகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலமாக மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றவே மக்களின் வரிப்பணம் ரூ.20 கோடி வீணாக செலவு செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. ஆனாலும் அப்போதய நிலையில் இயற்கையின் அருளால் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியதன் விளைவாக குடிநீர் பிரச்சனை சற்றே ஓய்ந்தது. அதன் காரணமாக ஆழ்துளை கிணறுகளை பராமரிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் விட்டுவிட்டது. தற்போது பருவமழை பொய்த்து, நீர்நிலைகள் வறண்டு, மீண்டும் வறட்சி தலைகாட்ட துவங்கிய நிலையில் இப்போதே மதுரை நகருக்குள் ஆங்காங்கே பல இடங்களில் குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.

தற்போதய சூழ்நிலையில் மதுரையில் குடிநீர் சப்ளை செய்யும் தொழில் நல்ல லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் தனியார் நிலங்களில் போர் மூலம் தண்ணீர் எடுத்து அதிக விலைக்கு லாரிகள் மூலம் பொதுமக்களிடம் விற்று பணம் பெருக்குகின்றனர். பல இடங்களில் மாநகராட்சி சார்பில் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வருவதால் மக்களும் லாரிகளில் பணம் செலுத்தி வாங்குகின்றனர். இந்நிலையில் மீண்டும் பழைய படி 500 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி 150 இடங்களில் போர் போட முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே போட்ட ஆழ்துளை கிணறுகளை பராமரிக்காமல் விட்டதால் தான் பிரச்சனையே என்ற நிலையில், நன்றாக இருக்க கூடிய ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து அதன் மூலம் தண்ணீர் எடுக்க முயற்சிக்காமல் மீண்டும் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, பழைய திட்டத்தையே செயல்படுத்த முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் சூழலே நிலவுகிறது.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518