Menu

Article

0 Comment

பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா... கடும் எதிர்ப்பில் ர.ரக்கள்!

Categories: 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று சொன்னதை, அமைச்சர்கள் கூட்டம் மரியாதை தராமலும், உத்தரவை மதித்து நடக்காமலும் பதவி கிடைத்தால் போதும் என்று நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது.

இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சசிகலாவின் உறவுகளை ஜெயலலிதா நீக்கி அறிவித்து, அவர் உயிருடன் இருந்தவரை இருந்த இடம் தெரியாமல் இருந்தவர்கள் எல்லாம் அதிகாரம் படைத்தவர்களாக, அவர் உடல் அருகே வளையம் அமைத்து நின்றதை பார்த்து அதிர்ந்த அ.தி.மு.க., ரத்தத்தின் ரத்தங்கள், அடிமட்ட தொண்டர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பரபரப்பான அறிக்கை, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கையெழுத்துடன் வெளியானது. அதில் சசிகலா (தலைமை செயற்குழு உறுப்பினர்), எம்.நடராஜன், திவாகரன்(மன்னார்குடி), டிடிவி தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், மோகன்(அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இத்துடன் முடியவில்லை நீக்கல் படலம். சசிகலா உறவினர்கள் பழனிவேல், கலியபெருமாள் மற்றும் சிலரும் அடுத்தடுத்த நாட்களில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அத்துடன் அதிகார மையத்தில் அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஜெயலலிதாவிடம் இருந்து இந்த நீக்கல் பட்டியல் வெளியானதும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க..,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதன்பிறகு இவர்களில் சிலர் மீது கைது நடவடிக்கையும் நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை இவர்கள் யாருக்கும் கட்சிக்குள் இடம் கிடைக்கவில்லை. ஆனால் தன்னிலை விளக்கம் அளித்த சசிகலா மட்டும் போயஸ் கார்டனுக்கு திரும்பினார். இளவரசி, தினகரனின் மனைவி அனுராதா உட்பட சில பெண்கள் மீது மட்டும் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நேரங்களில் வேட்பாளராகவும், அமைச்சரவை பட்டியல் தயாரித்த காலங்களில் அமைச்சர்களாகவும், கட்சி பதவிகளுக்கு நியமனத்தின் போது பொறுப்பாளர்களாகவும் சசிகலாவின் குடும்ப ஆதரவு பெற்றவர்கள் அதிகாரத்துக்கு வந்தனர்.

இன்று வரை இந்தநிலை தொடர்கிறது. ஆனாலும் அவர்கள் மீது ஏனோ ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக கட்சியில் நேரடியாக தலையிடாவிட்டாலும் நிழல் அதிகாரத்துடன் செயல்பட்டவர்களின் நிஜ முகங்களை உடல் நலக்குறைவால் செப்டம்பர் 22ம் தேதி அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட நாளிலேயே காண முடிந்தது.
74 நாட்கள் அங்கே தங்கியும், வந்து போவதுமாக இருந்தவர்கள், ஜெயலலிதா மறைந்தபின் அவர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டிசம்பர் 6ம் தேதி ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட நேரத்தில் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தனர். யாருடன் எல்லாம் அ.தி.மு.க.,வினர் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று ஜெயலலிதா கையெழுத்து போட்டு கட்சியை விட்டு நீக்கினாரோ, அவர்கள்தான் ஜெயலலிதா உடலை சுற்றி வளையம் அமைத்து நின்றனர்.

பிரதமர் மோடி, காங்., துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு நடராஜன் போன்றவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதையெல்லாம் நேரிலும், நேரடி ஒளிபரப்பு மூலமாகவும் பார்த்த அ.தி.மு.க.,வின் ஆணி வேரான அடிமட்ட தொண்டர்கள் கொதித்து போயினர். ஜெயலலிதா மரணம், அவர் விலக்கி வைத்தவர்களின் தரிசனம் போன்றவற்றால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலாவே கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கூறி அவரை சந்தித்து அழைப்பு விடுத்து வருவது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., உத்தரவை மறந்தது எப்படி? என்பது அதிர்ச்சியாக உள்ளது. தனக்கு பிறகு சசிகலாதான் என்று ஜெயலலிதா கூறவே இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறி கொதிக்கின்றனர். சசிகலாவை முன்னிலைப்படுத்தும் செயலில் அமைச்சர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அம்மா, அம்மா என்று கூழை கும்பிடு போட்டு வலம் வந்தவர்கள் இன்று சின்னம்மா என்று வலம் வருகின்றனர். காலில் விழுந்து வணங்க தொடங்கி விட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., தொண்டர்களும், பொதுமக்களும் யாரும் எதிர்க்காதது மட்டுமல்லாமல் யாருமே விரும்பாத திருப்பங்கள் செயற்கையாக உருவாகி மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இவர்களில் ஒருவர் அ.தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவை முன்னிலைப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. இதனால் அ.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சசிகலாவைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் திரைமறைவில் இருந்து கொண்டு காய் நகர்த்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல அ.தி.மு.க.,வினர் கடுமையான மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் ஒருவர் ஆவார்.

ஒவ்வொருவருக்கும் குடும்பம், தொழில் என்று இருப்பதால் எதையும் கெடுத்து கொள்ளாமல் அவர்கள் சொல்வதற்கு அப்படியே தலையாட்டி வருகின்றனர். சசிகலா விரும்பாமலேயே அவர் தலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் என்ற சுமையை தூக்கி வைப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று கொள்கிறேன் என்று இதுவரை சசிகலா சொல்லவே இல்லை. ஆனால் நீங்கள்தான் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் தினமும் சென்று அவரிடம் கெஞ்சி வருகிறார்களாம். இதற்காக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு வரவழைத்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி இருக்கிறார்களாம். அதேபோல ஜெ., பேரவை, மகளிர் அணி, இளைஞரணி என்று அனைத்து அணிகளின் கூட்டங்களையும் போட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியேற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் உத்தரவு போயிருக்கிறதாம். அவர்களும் தங்களது பதவிகளை காப்பாற்றி கொள்ள போட்டி போட்டு கொண்டு சசிகலாதான் அடுத்த வாரிசு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர்., இறந்தபோது ஆட்சி காலம் முடிய ஒரு ஆண்டுதான் இருந்தது. அதனால் அ.தி.மு.க., தலைமை பொறுப்பை ஏற்பது யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

அ.தி.மு.க., 2&வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்று 5 மாதங்கள்தான் ஆகிறது. இன்னும் முழுமையாக நான்கரை ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அ.தி.மு.க., பிளவுபட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டால் ஆட்சி அதிகாரத்தால் கிடைக்கும் பலன்கள் யாருக்கும் கிடைக்காமல் போவதுடன் தி.மு.க., எளிதில் ஆட்சியை பிடித்து விடும். அதனால்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று பலருடன் கட்சி தலைமையை சசிகலாதான் ஏற்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு அடிபணிந்து வருகிறார்கள்.

அதேநேரம் கட்சியில் எந்த பலனையும் அனுபவிக்காத தேர்தலுக்கு தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கட்சி ஜெயித்தால் போதும் என்று சந்தோஷப்படும் தொண்டர்களில் ஒரு சதவீதம் பேர் கூட, சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்க தயாராக இல்லை. ஜெயலலிதா 74 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்தது, இறந்தது போன்ற விஷயங்களால் அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருக்கிறார்கள். ஜெ., மரணத்தில் தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு சரியான பதிலை இதுவரை யாருமே கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் தொண்டர்கள் ஆதரவு தேவையில்லை என்று நினைக்கின்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருந்தால் போதும் என்பதால் அவர்களை சரிசெய்யும் வேலையில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வரும்போதுதான் அ.தி.மு.க., தொண்டர்களின் உண்மையான கோபம் வெளிபடும். அதில் இருந்து இவர்கள் யாரும் தப்ப முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518