Menu

Article

0 Comment

சாதியற்ற தமிழகம் ரஜினியின் வருகை தேவை

Categories: 

தமிழகம் - பெரியார் பிறந்த மண் - திராவிட இயக்கத்தின் தாயகம் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆட்சி செய்த தமிழகம் - நீதிக்கட்சியின் புகலிடம் தமிழகம் என வரலாற்றில் புகழப்படும் நமது பெருமைக்குரிய தமிழகத்தில் சாதி மறைந்ததா? சாதியற்ற தமிழகம் காண முடிகிறதா? மனிதனை மனிதன் மதிக்கக் கூடிய தன்மானம் கண்டெடுக்கப்படுமா? மனித வர்க்கத்தை சாதியின் பெயரால் பிரித்து நாயை முத்தமிடும் உயர்சாதிக்காரன் தாழ்த்தப்பட்டவனை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்படும் அவலநிலையை யார் தடுப்பது? அல்லது யார் தலைமையில் போராடுவது? முடியுமா? சிந்திப்போமா...

தி.மு.க.,வும் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தை எதிரணியாக பிரிந்து ஆட்சி செய்துவந்த காலத்தில், தி.மு.க.,வை பல சாதியினரும் காங்கிரஸ் கட்சியை உயர்சாதியைச் சார்ந்தவர்களும் தூக்கிப்பிடித்த காலத்தில் சாதி தமிழகத்தை ஆண்டது. ஆங்காங்கே இரண்டு கட்சியாலும் சாதிக் கொடுமைகள் நடந்தன. புனிதமான தமிழக மண்ணில் இரத்த ஆறு ஓடியது... யார் தடுத்தார்கள்? அல்லது நீதி கிடைத்ததா? இந்த இரண்டு கட்சிகள் தமிழகத்தை சாதியால் பிரித்த சமயத்தில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அரசியலில் குதித்தார். பேரறிஞர் அண்ணாவால் அரசியல் உலகில் அறிமுகம் செய்யப்பட்டு, தமிழக மக்களின் உள்ளமெலாம் நிறைந்த இடத்தைப் பெற்று, நடிப்பு உலகில் மனித நேயக்கருத்துக்களை இம்மண்ணில் விதைத்து, பல இலட்ச ரசிகர்களை நற்பாதையில் உருவாக்கிய “நடிகன் நாட்டை ஆள முடியுமா?” என்று கேள்வி இலங்கை மண்ணில் பிறந்து, கேரளாவில் வளர்ந்து, தாய் மண் தமிழகத்தை நேசித்த புரட்சித் தலைவர், பொன்மனச் செல்வர், எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஆண்டது சரிதான் என்று சொன்னால் சூப்பர்ஸ்டார் ரஜினியால் ஏன் முடியாது?

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அரசியலில் குதிக்கும் போது அவரது ரசிகர்கள் அவரது சாதியைப் பார்க்கவில்லை. எந்த மதம், அவரது மொழி எது-? அவர் பிறந்த மண், எந்த நாடு, எந்த மாநிலம் என யோசித்துக்கூட பார்க்கவில்லை? அவர் பிறந்தது இந்திய நாடு.. எனவே அவரை இந்தியனாகப் பார்த்தார்கள், நல்லது சொல்லும் தலைவனாகப் பார்த்தார்கள், மக்களுக்கு பிடித்தது, பதவியில் அமரவைத்து அழகு பார்த்தார்கள். தமிழகமே எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் தான் தமிழகம் என்று பார்த்தார்கள்... அப்பொழுதுதான் சாதி சாகடிக்கப்பட்டது. மனித நேயம் வளர்ந்தது... மக்களுக்கு நல்லாட்சி நடந்தது... எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தமிழக மக்கள் சாதியை மறந்து, இனத்தை மறந்து, மதத்தை மறந்து “எம்.ஜி.ஆர்” என்ற மனிதருக்குள் இணைந்தார்கள். ஆக எம்.ஜி.ஆர்., ரசிகர்களை மையப்படுத்தி தமிழகத்தை ஆண்டபோது அதே பாதையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோடான கோடி ரசிகர்கள் “ரஜினியின் ரசிகர்கள்” என்ற குடும்பமாக வாழும்போது சாதி அழிக்கப்படுகிறது. காரணம் அவர்களது கண்களுக்கு ரஜினி என்ற உலகம் மட்டும்தான் தெரிகிறது. ரசிகர்கள் எந்த சாதியினர் எனும் அடையாளக்குறி அழிக்கப்படுகிறது. எனவேதான் சாதியற்ற தமிழகம் காண வேண்டுமானால் ரஜினியின் அரசியல் பிரவேசம் இக்காலச் சூழ்நிலையில் தேவைப்படுகிறது என மக்கள் யோசிக்கிறார்கள்.

உலக வரலாற்றில் அனைத்து நாடுகளிலும் சினிமா வளர்ந்து வருகிறது. நடிகர்கள் தன் திறமையால் சாதனை படைத்து மக்கள் மனதில் நிலைக்கிறார்கள். அப்படித்தான் இந்தியாவிலும், தமிழகத்திலும் நடிகர்கள் மக்கள் மத்தியில் மதிக்கக் கூடியவர்களாக வாழ்கின்றார்கள். நாம் ஒரு கருத்தை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள், தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த கட்சி தொண்டன் வீட்டில் அல்லது எந்த தொண்டனாவது தலைவருடன் கைகோர்த்துக் கொண்டு, தோள் மீது கைபோட்டுக் கொண்டு அல்லது தலைவரை கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படங்கள் இருக்குமா? என்று கேட்டால் இருக்காது. சரி, அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு நடிகர்கள் யாராவது தன் ரசிகர்களை நேசித்து “தலைவனும் தொண்டனும் சரிசமம்” என்ற நியதியை உலகிற்கு எடுத்துச்சொல்ல ஆதாரங்கள் இருக்குமா? என்று பார்த்தால் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ரஜினியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. மனிதன் வரலாறாக வாழ வேண்டும், மனிதனை உருவாக்கும் மக்களுக்கு மனித நேயம் தேவை... அதைவிட மக்கள் நேசிக்கும் தலைவன் வரலாற்றை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தேவைப்படுகிறது.

“தன்மானமுள்ள தமிழன்” என முழக்கமிடும் ரஜினி, தமிழக ரசிகர்களை மாவட்ட வாரியாக கண்டெடுத்து கட்டிபிடித்து, வாரி அணைத்து இரண்டு இதயங்கள் இணையும்படி இருக அணைத்து “புகைப்படம்” எடுத்த நிகழ்வு உலகில் போற்றப்படும் மனித நேயமாகும். எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், பாசம், ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்திருப்பது பெருமைக்குரியது. ரஜினி எனும் தூய்மையான காற்று ரசிகர்கள் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்குள் செல்லும் போது, சாலைகளில் புகும்போது, கிராமத்திற்குள் செல்லும்போது அக்கிராமத்தில் சாதி சாகடிக்கப்படும், மனித நேயம் வளர்க்கப்படும், இதனால் சாதியற்ற சமுதாயம் உருவாக்கப்படும். ரஜினிக்கு என்ன தெரியும்? அரசியல் அனுபவம் உண்டா? என்று கேட்கிறார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர்., அவர்களைப் பார்த்து கேட்க, நடிக்க வந்த எம்.ஜி.ஆரை நாட்டை ஆண்டிட வைத்தார்கள். இதே நிலைதான் ரஜினிக்கும்... இவர்கள் கேள்வி கேட்க, கேட்க அவரும் பதிலை தேடுகிறார்... இறுதியில் நாட்டை ஆண்டிட அழைக்கப்படுவார்... இதுதான் நடக்கும்... காலச் சூழ்நிலை.

ரஜினிக்கு என்ன தெரியும்? அரசியல் தெரியுமா? காவிரிக்காக குரல் கொடுத்தாரா? விவசாயிகளுக்காக குரல் கொடுத்தாரா? ஜல்லிகட்டுக்கு எதிர்ப்பு செய்தாரா-? கர்நாடகாவில் சத்தியராஜிக்கு எதிராக பிரச்சினை வந்தபோது ஆதரவு தெரிவித்தாரா? இப்படி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவரது அரசியல் பிரவேசத்தை கொச்சைப்படுத்தியும், அவரது உருவ பொம்மையை எரிப்பதும், அரசியல் எண்ணத்தை தடை செய்யவும் நாளுக்கு நாள் வளர்வதை மக்கள் பார்க்கிறார்கள். இவரைப் பார்த்து பல கேள்விகளைக் கேட்பவர்களைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி... நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்பதுதான்.

உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத “அரசியல் ஞானம்” ரஜினிக்கு உண்டு என்பது சிந்தனையாளர்களின் முடிவு. உலகில் அமெரிக்கா, இந்தியா நாடுகள்தான் ஜனநாயக நாடுகள். அமெரிக்காவில் “CHANGE” -மாற்றம் என்ற சொல்லை பயன்படுத்தி அதிபர் ஒபாமா - நீக்ரோ இனத்தைச் சார்ந்தவர் அந்நாட்டை ஆண்டார்... வரலாறு இதுதான்... அடுத்து இந்திய ஜனநாயக நாட்டில் “SYSTEM” சிஸ்டம் என்ற வார்த்தையை சூப்பர் ஸ்டார் ரஜினி பயன்படுத்தியுள்ளார். சிஸ்டம் என்ற வார்த்தையில் எல்லாமே அடங்கிவிட்டது... ‘சிஸ்டம்’ சரியில்லை... மக்களை நல்வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் ‘திட்டம்’ சரியில்லை என்றார். அவர் சொன்னதில் தவறில்லை என மக்கள் கருதுகிறார்கள்...

தமிழகம் சாதியற்ற தமிழகமாக மிளிர வேண்டுமானால் ரஜினி என்ற மாமனிதர் தமிழக அரசியலில் நுழைந்தால் மட்டுமே “SYSTEM” சரியாக இருக்கும்... இது மக்களின் எதிர்பார்ப்பு - காத்திருப்போம்... தமிழகத்திற்கு விடியல் வரும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518