Menu

Article

0 Comment

அடாவடி அறநிலையத்துறை இன்ஸ்! அலறும் குத்தகைதாரர்கள்!!

Categories: 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அறநிலையத்துறை ஆய்வாளராக சத்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதிகளிலுள்ள கோவில்களின் தர்மகர்த்தா, கட்டளைதாரர்கள், நிலமானிய தாரர்கள் போன்றவர்களை தனது அதிகாரத்தினை பயன்படுத்தி மிரட்டி வருகிறார் எனவும், மேலும் கோவில்களில் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பாலக்கோடு தாலுக்காவில் மட்டும் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் கோவில் மானிய நிலங்கள் உள்ளன. இவைகளனைத்தும் அறநிலையத் துறையினரால் குத்தகை வழங்கப்பட்டு வருவாய் அரசுக்கு முறையாக சென்று கொண்டுள்ளது. ஆனால் இந்த பகுதியின் அறநிலையத்துறை ஆய்வாளராக சத்யா பணியில் சேர்ந்தது முதல் கோவில் பூசாரிகள் சரிவர பூஜை செய்வதில்லை, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தாது நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது போன்ற புகார்களை தனது ஆதரவாளர் மூலம் போலியாக தயாரித்து, அதனை வைத்து அவர்களை மிரட்டுவதும், மாத மாமூல் வசூலிப்பதுமாக தனது அடாவடி வசூலை துவக்கினார்.

மேலும் அப்பகுதிகளிலுள்ள திருக்கோவில் உண்டியல் எண்ணும்போது கண்காணிக்க ஒரு கணிசமான தொகை, கோவில் நிலங்கள், கடைகள் வாடகை மற்றும் குத்தகை விடும் போது ஒரு கணிசமான கட்டிங் வாங்கிக் கொண்டு ஊழல்வாதிகளுக்கு உதவிக்கரம் நீட்டத் துவங்கியவர், அதனையடுத்து பல கோவில் தர்மகர்த்தாக்களை பரம்பரை பதவியிலிருந்து விரட்ட திட்டம் தீட்டி தோல்வியடைந்துள்ளார் எனவும், கடந்த ஓராண்டுக்கு முன் ஆதி நாராயணன் திருக்கோவில் பொம்மனூரில் உள்ளது, இந்த திருக்கோவில் பூசாரிகளான ராகவன், பிரபு, கிருஷ்ணன் ஆகியோரை மிரட்டியதாக பிரச்சனை கிளம்பி அது இன்றும் கிடப்பில் கிடக்கிறதாம்.

இதே போல் பாலக்கோடு நகரிலுள்ள புதுமாரியம்மன் கோவிலின் கட்டுமானப் பணிகள் 1 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இதில் ஒருசில லகரங்களை ஒப்பந்ததாரர்களிடம் வசூலித்ததாக தகவல் கூறினர். பிக்கன ஹள்ளி அருகில் போடரஹள்ளி வனப்பகுதியிலுள்ள சென்றாய பெருமாள் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் புதிய மண்டபம் மற்றும் பிரகாரம் கட்டப்பட்டது. இது கட்டியதில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டாராம் சத்யா.

மகேந்திர மங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்படும் மாரியம்மன் கோவிலின் திருப்பணியில் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறாராம் சத்யா. மேலும் மாரண்டஹள்ளி அங்காளம்மன் கோவில் மற்றும் பட்டாளம்மன் கோவில் குத்தகையில் பல குளறுபடிகளை இவர் செய்துள்ளாராம்.

இறுதியாக பொம்மனூர் பசுவன்ன கோவில் மானிய நிலத்திலுள்ள மண்டு மாரியம்மன் கோவில் வேப்பமரம் கடந்த வாரம் பெய்த கன மழையின் போது வீசிய காற்றில் முறிந்து விழுந்தது. அதனை ஊர்கவுண்டர் கணேசன் மற்றும் ஆனந்தன் ஆகியோரிடம் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு 50 ஆயிரம் மதிப்புள்ள மரத்தை ஒருசில ஆயிரங்களுக்கு வெட்டிக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர் ஏலம் விடாது, என புகார் கிளம்ப தன்னை காத்துக் கொள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என கூறி தப்பித்துக் கொண்டுள்ளாராம்.

இவரின் அடாவடி மிரட்டலுக்கு பயந்து கோவில் நிலங்கள் குத்தகைதாரர்கள் பலரும், அந்த ஆண்டவன், சத்யாவிற்கு எப்போது வேண்டுமானாலும் தண்டனை கிடைக்கட்டும், இப்போதைக்கு வேறு பிளாக்குக்கு போனால் போதும் என எதிர்பார்க்கின்றனர். முடிவு அறநிலையத்துறை யி.சி மங்கையர்கரசி கையில்தானுள்ளது. ஆனால் இவருக்கும் சத்யாவிற்கும் சரியான புரிதல் இருப்பதால் நடவடிக்கை கேள்விக் குறியே என்கின்றனர் ஆன்மீக நண்பர்கள்!

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518