சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், வங்க கடலில்,40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை வரை மிக கனமழையும், 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

இதனிடையே கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்(ஆக., 6) 40 செ.மீ., பதிவாகிய நிலையில், நேற்று 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அப்பர் பவானியில் 30 செ.மீ., கூடலூரில் 24 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., நடுவட்டம், எமரால்டில் தலா 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

படகு மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், அழகிய மண்டபம், தக்கலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. குளச்சல் பகுதியில், கடல் சீற்றமாக காணப்படுகிறது. 2 விசைப்படகுகளை அடித்து சென்றது.

வீடுகளுக்குள் தண்ணீர்

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் வேடன்மயில், இருவயல், தேன்வயல், மங்குழி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதனால், அப்பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *