வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2018-ம் ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளா மீண்டும் அதுபோன்ற நிலையை எதிர்க்கொண்டுள்ளது. தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளம்,  மிகப்பெரிய நிலச்சரிவினால் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் மிகப்பெரிய நிலச்சரிவினால் இடர்களை  எதிர்க்கொண்டுள்ளது. மாநிலத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.  லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளம் மற்றும்  நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும் என தமிழில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் தமிழில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், இந்த வருடம் கேரளாவில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊர் மக்கள்  இன்னும் மீண்டுவரவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதாருக்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு  முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை வரை 91 நபர்கள் உயிர்  இழந்துள்ளார்கள். 1243 அரசு முகாம்களில் 224506 மக்கள்  தங்கி வருகிறார்கள்.
கேரளாவில் வெள்ளம் : தமிழக மக்கள் உதவ வேண்டும் -தமிழில் கேரள முதல்வர் கோரிக்கை
நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளத்திற்கு பிறகு இந்த பேரழிவு என்பது குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீட்டின்படி இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு 31,000 கோடி தேவை. இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகத் தேவை. முடிந்த அளவுக்கு உதவுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருடைய கோரிக்கையை ஏற்பதாக டுவிட்டர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டியது போன்று இவ்வாண்டும் உதவி செய்வோம் என டுவிட்டர்வாசிகளும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *