விஜய் சேதுபதி விரும்பியது என்ன? - 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சேரன் பேட்டி

விஜய் சேதுபதி விரும்பியது என்ன?  - 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சேரன் பேட்டி

தன்னிடம் விஜய் சேதுபதி விரும்பியது என்ன என்பது குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சேரன் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. இந்நிகழ்ச்சியின் போட்டியாளராக இயக்குநர் சேரன் கலந்து கொண்டபோது திரையுலகினர் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஏன் கலந்து கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

அந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில நாட்களில் போட்டியாளர்களிடம் பேசும்போது சேரன், "இதில் கலந்துகொள்ள விஜய் சேதுபதிதான் காரணம். நீங்கள் இதில் கலந்துகொண்டால் மீண்டும் பொதுமக்களிடையே சென்றடைவீர்கள் எனத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கான கதை விவாதப் பணிகளில்தான் சேரன் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சேரன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, ” 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குச் செல்ல விஜய் சேதுபதிதான் காரணமா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு இயக்குநர் சேரன், "உண்மைதான். விஜய் சேதுபதியின் தேதிகள் என்னிடம் இருந்தது. ஜனவரி, பிப்ரவரியில் படப்பிடிப்பு போவதாக இருந்தோம். இந்த வாய்ப்பு வந்தது தொடர்பாக அவரே என்னிடம் கேட்டார். அப்போது "போய்ட்டு வாங்க. வேறொரு உலகத்தை இது உருவாக்கும்” என்றார். அவர் சொன்னதுதான் நடந்தது. கடந்த 6-7 வருடங்களாகத் தொடர்ச்சியாகப் படம் பண்ணவில்லை. அவ்வப்போது ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன். இன்றைய இளைஞர்களுக்கு இந்தக் காலப் படங்கள் தான் தெரிய ஆரம்பித்ததே தவிர, 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்' காலங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த காலமாகிவிட்டது.

அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ண, அவருக்கு ஒரு மாஸ் ரீச் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு இயக்குநராகவும் நான் இருக்க வேண்டும் என விஜய் சேதுபதி விரும்பினார். இதில் நீங்கள் சென்றால் அனைத்துத் தரப்பு மக்களும் நீங்கள் தெரிந்த நபராக மாறிவிடுவீர்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தால் பல குடும்பங்களுக்கு உதவும் என்றார். அதை நான் செய்துகொண்டு வந்தேன். விஜய் சேதுபதியுடனான படம் விரைவில் நடக்கும்” என்று பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.