லக்னோ: அயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த சிலை அமையும் போது,உலகின் மிகப்பெரிய சிலை என்ற பெருமை கிடைக்கும்.

நேற்று(ஜூலை 22) நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் யோகி. ஆதித்யநாத் கூறியதாவது: இந்த ராமர் சிலை 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான உதவி, குஜராத் அரசிடம் கேட்கப்படும்.

இங்கு சிலை மட்டுமல்லாது டிஜிட்டல் அருங்காட்சியகம், உணவகங்கள், ராமர் குடில், வேத நூலகம், வனவாசம் போன்ற தோட்டம், குருகுலம், கலையரங்கம் உள்ளிடவை அமைக்கப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்படும். சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஐஐடி கான்பூர் மற்றும் நாக்பூரில் உள்ள நீரி(தேசிய பசுமை பொறியியல் ஆய்வக அமைப்பு) அமைப்பின் உதவி கேட்கப்படும் .
திட்டத்தை கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்படும்.அயோத்தியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தியின் கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான திட்டங்களும் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

251 மீ., உயரத்திற்கு ராமர் சிலை அமையும் போது, அது உலகின் மிகப்பெரிய சிலையாக இருக்கும். நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை 93 மீ., மும்பையில் உள்ள அம்பேத்கார் சிலை 137.2 மீ., குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை 183 மீ., சீனாவில் உள்ள கவுதம புத்தர் சிலை 183 மீ., மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை 212 மீ., உயரம் கொண்டவை.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அயோத்தியில் 7 அடி உயரத்தில், அமைக்கப்பட்ட ராமர் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *