சென்னை: ஏறக்குறைய இந்தியாவின் பாதி பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி, குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், இறந்து போன நதி ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன் வேலூர் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது, நாகநதி ஆறு. நீர் வரத்து இல்லாததால் மெல்ல மெல்ல வறண்ட இந்த ஆறு கடந்த 15 ஆண்டுகளாக மற்றிலும் காணாமல் போனது. இதன் விளைவாக பல கிராமங்களில் மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் நீர் நிலைகளை பாதுகாக்க எண்ணிய உள்ளூர் தன்னார்வலர்களும், மகளிர் குழுக்களை சேர்ந்த 20,000 பெண்களும் ஒன்றிணைந்து கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து 2018 ம் ஆண்டு நாகநதியை மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இவர்களின் கடும் முயற்சியால் சுமார் 3500 கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. பெண்கள் ஒன்று கூடு தற்போது இப்பகுதியை பசுமையாக்கி உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள். மழைநீர் வடிகால்கள் ஆகியனவும் அமைத்துள்ளனர். தற்போது இந்த ஆறு மீண்டும் உயிர் பெற்று ஓட துவங்கியதுடன், நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளதாக நாகநதி உயிர்ப்பு திட்டத்தின் இயக்குனர் சந்திரசேகரன் குப்பன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நல்ல முறையில் மழை பெய்தால், நாகநதியில் முழு அளவிற்கு நீர் பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாதித்தது எப்படி :

2014 ம் ஆண்டு ரூ.5 கோடி பட்ஜெட்டில் மத்திய அரசு ஒப்புதலுடன் இந்த திட்டம் துவங்கப்பட்டது. தன்னார்வலர்களுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்திருந்த பெண்கள், மகளிர் குழுக்கள் என 20,000 ஒன்றிணைந்து தினசரி பணியாக இதனை செய்துள்ளனர். 3500 கிணறுகள் மற்றும் குளம் குட்டைகளை இவர்கள் தூர்வாரி உள்ளனர். மழைகாலம் துவங்க உள்ளதால், மழைநீரை சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *