சென்னையில் பாட்டியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது 15 வயது மகளை சற்று தொலைவில் இருக்கும் உறவுக்கார பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் கடந்த 3ஆம் தேதியும் அதுபோல் விட்டுச் செல்லவே, சிறுமிக்கும் பாட்டிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமுற்ற சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், செல்லும் வழியில் தனக்கு நன்கு பழக்கமான ஜெபினா என்ற பெண்ணை பார்த்ததாக சொல்லப்படுகிறது.
சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஜெபினா, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தனது தோழி முபினா பேகம் என்பவர் மூலம் புரசைவாக்கம் முத்து தெருவில் உள்ள நிஷா என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் சிறுமிக்கு மது வாங்கி ஊற்றிக் கொடுத்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷா என்ற பெண், பகல் வேளையில் தமது வீட்டில் பெண்களை அழைத்து வைத்து பாலியல் தொழில் செய்பவர் என்று போலீஸ் விசாரணைத் தகவல் கூறுகிறது. இந்த நிலையில் மது மயக்கத்தில் இருந்த சிறுமியை நிஷா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
3 நாட்களாக அச்சிறுமியை அடைத்து வைத்து, 5 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கிடையே சிறுமியை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த வேளையில், 7ஆம் தேதி அன்று உடலில் பலத்த காயங்களுடன் சிறுமி வீடு திரும்பியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தாயிடம் அவர் தெரிவிக்கவே போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகிய மூன்று பெண்களையும் கைது செய்த புளியந்தோப்பு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை, ஆய்வாளர் ரவி தலைமையிலான தனிப்படை தேடி வருகிறது. விசாரணையில், அந்த 3 பெண்களும் பாலியல் தொழில் தரகர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
வீட்டை விட்டு வரும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அவர்கள் 7 ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரில் ஒருவன் வடமாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்பதையும், அவன் நிஷாவுக்கு பழக்கமானவன் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியிடம் குழந்தைகள் நல குழும அதிகாரிகளும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *