பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. மேலும், அந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது. அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தன. இதில், தேவாலயத்தின் கோபுரம் கருகி விழும் காட்சிகளை பார்த்து உலகமே சோகத்தில் மூழ்கியது. மேலும், தேவாலயக் கட்டமைப்பில் பெருமளவு ஈயம் பயன்படுத்தப்பட்டிருந்ததால், தீவிபத்து காரணமாக ஏற்பட்டுள்ள ஈய மாசுபாட்டை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பணிகள் முடியும்வரை சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கலாச்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிபத்துக்குப் பிறகு, அண்மையில் வீசிய அனல் காற்று காரணமாக நோட்ரே டேம் தேவாலயத்தின் மேலும் சில கல்கள் விழுந்துவிட்டன. இதன் காரணமாக, அந்த தேவாலயம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதி மிகவும் மாசடைந்துள்ளதால், தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *