சென்னை,
நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல்  (வயது 68). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவருடைய மனைவி செந்தாமரை (65).
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்து செல்போனில் மகனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையன் நைசாக அங்கு வந்தான். அவன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினான். அதை பார்த்து வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர் நாற்காலி உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்து தாக்கினார்.
அதற்குள் தோட்டத்தில் மறைந்திருந்த மற்றொரு கொள்ளையன் அங்கு வந்தான். கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனாலும் அந்த தம்பதியினர் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்களை தொடர்ந்து தாக்கினர். ஒரு கட்டத்தில் கொள்ளையன் ஒருவன், செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான்.
அதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், மனம் தளராத வயதான தம்பதி அவர்களை விடாமல் தாக்கினர். இதில் நிலை குலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கொள்ளையர்களுடன் துணிச்சலுடன் போராடியபோது, அரிவாள் வெட்டில் செந்தாமரையின் கையில் காயம் ஏற்பட்டது.
கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. அதில், கொள்ளையர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தது, அவர்கள் அரிவாளை காட்டி வயதான தம்பதியை தாக்குவது, கொள்ளையர்களை கணவன்-மனைவி இருவரும் துணிச்சலுடன் விரட்டியடிப்பது தொடர்பான திக்…திக்… காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் நேற்று இணைய தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகியது. இந்தியாவின் அனைத்து செய்தி சேனல்களிலும் இடம் பெற்றது.
வயதான தம்பதியினரின் துணிச்சலை  பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அருண்சக்திகுமார் நேரில் சென்று  பாராட்டினார்.
இந்த நிலையில், வீரத்தம்பதிகளின் துணிச்சலை கண்டு தமிழக அரசின் வீரதீர செயல் விருது வழங்க மாவட்ட கலெக்டர்  ஷில்பா பரிந்துரை செய்து உள்ளார்.
இதை தொடர்ந்து கொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின  விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *