சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
மதுரை:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி உள்ளனர்.

காப்பகத்தை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் (வயது41) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் அந்த காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு தங்கி உள்ள சிறுவர் -சிறுமிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் மல்க அதிர்ச்சி தகவல்களை சண்முகத்திடம் தெரிவித்தனர்.

ஆதிசிவன் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மற்ற சிறுவர்-சிறுமிகளையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் புகார் குறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.

மேலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதாக கூறி வேலியே பயிரை மேய்ந்த கதைபோல சிறுமிகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை உரிய விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் புகார் காரணமாக சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் ‘சீல்’வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *