தோனியின் திறமைக்காக மக்கள் அவரை விரும்புகின்றனர்: குடியரசுத் தலைவர்

தோனியின் திறமைக்காக மக்கள் அவரை விரும்புகின்றனர்: குடியரசுத் தலைவர்

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் திறமைக்காக மக்கள் அவரை விரும்புகின்றனர் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

ராஞ்சி பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கள்கிழமை) மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

"எம்எஸ் தோனி என்னை நேற்று மரியாதை நிமித்தமாக ராஜ்பவனில் வைத்து சந்தித்தார். நீங்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தாலும், நீங்கள் திறமை வாய்ந்தவர் என்பதால் மக்கள் உங்களை விரும்புகின்றனர் என்று அவரிடம் தெரிவித்தேன். அவருடைய திறமை ஜார்கண்ட் திறமையை வெளிப்படுத்துகிறது. உலக கிரிக்கெட்டில் தோனி ராஞ்சியை பிரபலப்படுத்தியுள்ளார்" என்றார். 

முன்னதாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார்.