சென்னைக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்படும் நிலையில் அதிலிருந்து 10லட்சம் லிட்டர் தண்ணீரை தண்டவாளத்தில் கொட்டி வீண் செய்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 65 கோடி ரூபாய் செலவு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

இறுதியாக ரயிலில் 50 கண்டெய்னர்கள் மூலம் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வருவதாக முடிவானது. இன்று மதியம் ரயில் சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கண்டெய்னர்களில் தண்ணீர் நிரப்ப 100 ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு கண்டெய்னரிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால் அதை அந்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் சரியாக சொன்னார்களா என தெரியவில்லை. இதனால் ஊழியர்கள் அனைத்து கண்டெய்னர்களிலும் அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் நிரப்பிவிட்டார்கள்.

கடைசியாக வந்து பார்த்த அதிகாரிகள் தண்ணீர் அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது. அதை குறைக்காவிட்டால் ரயில் பயணத்தில் சிக்கல் ஏற்படுமென கண்டெய்னர்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். 50 கண்டெய்னர்களிலிருந்து சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் யாருக்கும் உதவாமல் தண்டவாளத்தில் கொட்டப்பட்டது. இதை அங்கிருந்த பொதுமக்கள் வேதனையோடு பார்த்து சென்றனர். தண்ணீர் கிடைக்காத காலத்திலும் இவர்கள் அலட்சியம் குறையவில்லையே என பலர் குறைப்பட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *