கேரளாவில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த கனமழையால் 72 பேர் உயிரிழந்தனர் எனவும், 2.5 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவமும் கடலோர காவல்படையும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதே போல் கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ராய்ச்சூர், யாதகிரி, கலபுர்கி, குடகு, சிவமொக்கா, சிக்கமகளுரு, ஹாசன், மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 2,028 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *