கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ‘மம்மி’
கொல்கத்தா:
எகிப்து நாட்டில் பண்டைய காலங்களில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்கள் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்துள்ளனர். அவைகளை ‘மம்மி’ என்று அழைக்கிறோம்.
கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ‘மம்மி’யை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்தார்.
ஆய்வுக்குப் பிறகு அவர் அளித்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக தெரிவித்த அவர் அதை சரி செய்ய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆதலால் ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்கும்படியும் யோசனை தெரிவித்துள்ளார்.
‘மம்மி’

இது குறித்து இந்திய அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில், “நிபுணர் ரானியா அகமது ஆய்வு செய்து சென்ற பின்பு ‘மம்மி’யை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். அது வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனமுடன் பராமரித்து வருகிறோம். இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது. அதை தவிர்க்க இப்போது காற்று புகாத அறையில் வைத்துள்ளோம். மேலும் நிபுணர் கூறியவாறு பெட்டியின் ஈரத்தன்மையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும் மற்றும் அது நிறம் மங்காமல் இருக்க குறைவான வெளிச்சத்திலும் வைத்துள்ளோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *