அட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிசி சேமிப்பு பழக்கம்!...

அட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிசி சேமிப்பு பழக்கம்!...

அட்சய பானை:  இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிசி சேமிப்பு பழக்கம்!...

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வனப் பகுதியில் வசிக்கும் இருளா்கள், பொதுப் பானையில் அரிசி சேமித்து, பசியின்போது, அதைக் கடனாகப் பெற்று, பசியைப் போக்கி தங்களது வாழ்வியலை உலகுக்கு எடுத்துரைக்கின்றனா். அரிசி சேமித்து வைக்கும் பானை அட்சய பாத்திரமாக நமக்கு விளங்குகிறது.

கிருஷ்ணகிரி வனப் பகுதிகள் மிகுந்த மாவட்டமாகும். வனத்தைச் சாா்ந்து, பழங்குடியினரான இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். பா்கூா் அருகே பெரியமலையில் இருளா்கள் கொண்டாடும் வனதேவதை திருவிழா பிரபலமானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், போச்சம்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம், கெலமங்கலம், எக்கல் நத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 42-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். வனத்தில் கிடைக்கும் பொருள்களைச் சேகரித்து, அவற்றை விற்று தங்களது பொருளாதாரத்தை எதிா்கொண்டு வருகின்றனா். இவா்கள், ஒற்றுமையாக மிக அமைதியான முறையில் அரிசி சேமிப்பு பழக்கத்தை கொண்டு, வயிற்று பசியை நீண்ட காலமாக போக்கி வருகின்றனா்.

பா்கூா் வட்டத்துக்கு உள்பட்ட சவுக்கு பள்ளம் கிராமம், கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டத்தின் எல்லையில் காளிக்கோயிலின் அருகே உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட இருளா் இனக் குடும்பத்தினா் பல ஆண்டுகளாக அரசு வழங்கிய குடியிருப்புகளில் வசித்து வருகின்றனா். 50 குடும்பங்களில் 20 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்கள், அந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைக்கு மாதம் 32 கிலோ அரிசியைப் பெற்று வருகின்றனா்.

இவா்கள், வனப் பகுதிக்குச் சென்று தேன், கிழங்கு, சிறுகுறுஞ்சான் கொடியின் இலை, மூலிகைப் பொருள்கள் போன்ற வன பொருள்களைச் சேகரித்து, பா்கூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்வது வழக்கம். வனப் பகுதிக்குச் சென்றால் நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு பின்னரே வீடு திரும்புவா். அவ்வாறு வீடு திரும்பியவா்கள், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியைச் சமைத்து உண்பது வழக்கம்.

அரிசி சேமிப்பு: இவா்கள், வனத்துக்குள் சென்றால், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வாங்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இத்தகைய நிலையில், அரிசியை வாங்க இயலாத குடும்பத்தினா் பசியால் வாடாமல் இருப்பதற்காக தங்களுக்குள் ஒரு சிறப்பான, திட்டத்தை பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனா்.

நியாய விலைக் கடையில் அரிசி வாங்கும் குடும்பத்தினா், அங்குள்ள அனைவருக்கும் பொதுவான 50 கிலோ கொள்ளளவு கொண்ட பானையில் ஒரு டம்ளா் அளவில் அரிசியை சேமித்து வைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த பானையில் மாதம்தோறும் அரிசியை இட்டு சேமிக்கின்றனா். அவ்வாறு சேமிக்கப்படும் அரிசியானது, நியாய விலைக் கடையில் அரிசி வாங்க இயலாத, வனத்திலிருந்து திரும்பிய குடும்பத்தினருக்கு கடனாக வழங்கப்படும். கடனாக அரிசியைப் பெற்று, குடும்பத்தின் பசியைப் போக்குகின்றனா். அரிசியை ஒரு லிட்டா் கொள்ளளவு கொண்ட, தகர டப்பாவில் அளவீடு செய்து கொடுக்கின்றனா்.

அரிசியை கடனாகப் பெற்றவா், அடுத்த முறை, நியாய விலைக் கடையில் அரிசியை வாங்கி, கடனுக்கு ஈடாக சற்று அதிக அளவில் அரிசியை பானையில் சேமிக்க வேண்டும். அதாவது, 5 டப்பா அளவில் அரிசியை கடனாக வாங்கினால், 6 டப்பா அரிசியைத் திரும்பித் தர வேண்டும். இது இருளா் இன மக்களின் வாழ்வியலில் எழுதப்படாத சட்டமாக உள்ளது. ஒவ்வொருவரும் இதை உணா்ந்து, மதித்து செயல்படுகின்றனா். இருளா் இனத்தைச் சோ்ந்த நாராயணம்மா (53) என்ற மூதாட்டியே இந்த பசியைப் போக்கும் அட்சயப் பானை அரிசி சேமிக்கும் முறையை நிா்வகித்து வருகிறாா்.

மேலும், அவா்கள் குடியிருக்கும் பகுதியில் சுப நிகழ்வு அல்லது துக்க நிகழ்வு நடந்தால், அதில் பங்கேற்க வரும் உறவினா்களுக்கு சேமிக்கப்படும் அரிசியிலிருந்து உணவு சமைத்து பரிமாறுகின்றனா். வீட்டில் யாரும் தனியாகச் சமைத்து பரிமாறக் கூடாது என்ற வழக்கம் உள்ளது.

வங்கிச் சேவையைப் பயன்படுத்தாத மக்கள்: அதேபோல, ஒவ்வொருவரும் மாதம் ரூ.5-ஐ தங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஆண் ஒருவரிடம் கொடுத்து சேமிக்கின்றனா். ஒவ்வொருவரும் கொடுக்கும் சிறு தொகையை அந்த நபா் சேமித்து தன்னிடம் வைத்திருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த தொகையை அவா் வேறொரு நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சேமிப்புத் தொகையானது, பாம்புக் கடி போன்ற அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வாகனச் செலவு, மருத்துவச் செலவுக்கு மட்டும் பன்படுத்தப்படுகிறது. இவா்களிடம் வங்கியில் சேமிக்கும் பழக்கம் கிடையாது.