'வர்மா' டீஸருக்குக் கிடைத்த ஏமாற்றம்; அப்பாவின் உதவி: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

'வர்மா' டீஸருக்குக் கிடைத்த ஏமாற்றம்; அப்பாவின் உதவி: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

வர்மா' டீஸருக்குக் கிடைத்த ஏமாற்றம், 'ஆதித்யா வர்மா' படப்பிடிப்பில் அப்பாவின் உதவி உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக துருவ் விக்ரம் கல்லூரி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டது. ’வர்மா’ என்ற பெயரில் உருவான ரீமேக்கை பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், இறுதி வடிவம் திருப்தி தராததால் படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது படக்குழு.

இதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கத்தில் மீண்டும் ரீமேக் தொடங்கப்பட்டது. இதில் துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, நவம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.

'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பல்வேறு வகைகளில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதற்காக, கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கலந்துரையாடினார் துருவ் விக்ரம்.

அதில் அவர் பேசும் போது, "சின்ன வயதிலிருந்தே என் தந்தையைத் திரையில் பார்த்து வருகிறேன். அவருக்காக ரசிகர்கள் விசிலடிக்கும் போது, அது எனக்குக் கிடைத்த பாராட்டு போல் மகிழ்வேன். அவரது பல படங்களை ரசிகராகவே பார்த்துள்ளேன். என் தந்தையின் 'ராவணன்', 'அந்நியன்' உள்ளிட்ட அனைத்துப் படங்களையும் பார்த்துள்ளேன். எனது தந்தையின் வசன வெளிப்பாடு ரொம்பவே சிறப்பாக இருக்கும். அதை என்னால் எட்ட இயலாது.

'ஆதித்யா வர்மா' படப்பிடிப்பில் ஒவ்வோரு நாளுமே அப்பா என்னுடனே இருந்தார். அவர் என்ன சொன்னாலும் மறக்காமல் செய்தேன். நடிப்பைக் கற்றுக்கொள்ள வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்தேன். 'வர்மா' படத்தில் நடித்ததால், நடிப்பில் கொஞ்சம் அனுபவம் கிடைத்தது. திரையில் என்னை அல்ல, எனது தந்தையையே நீங்கள் பார்ப்பீர்கள்.

ரீமேக் படத்தில் நடிக்கும் போது, ஒரிஜினல் படத்துக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும். சில விஷயங்களைத் தழுவ வேண்டும். ஏற்கெனவே வெற்றியடைந்த ஒன்றை நீங்கள் மறு ஆக்கம் செய்கிறீர்கள். அவ்வளவே. ஆனாலும், அதில் உங்கள் பாணியைப் புகுத்தலாம்.

'வர்மா' டீஸர் வெளியானபோது அதை நிறைய பேர் ஏற்கவில்லை. உங்கள் நடிப்பை மக்கள் சீர்தூக்கிப் பார்க்கலாம். ஆனால், படத்தில் உங்கள் தோற்றத்தையே அவர்கள் ஏற்கவில்லை என்றால் அது ஒருவிதத்தில் அவமதிப்பாகலாம். என் வாழ்வில் முதன்முறையாக ’வர்மா’ படத்துக்காகத் தாடி வைத்தேன். ஆனால், மக்கள் அது அசிங்கமாக இருப்பதாக விமர்சித்தார்கள். விமர்சனங்கள் நம்மை கீழே இறக்கிவிடக் கூடாது என்பதை உணர்ந்தேன். எல்லோருக்குமே விமர்சிக்கும் தகுதி இருக்கிறது.

படத்தை எடுத்தவர்கள் படத்துக்காக நான் புகைபிடிக்க வேண்டும், மது அருந்த வேண்டும் என்று கூறினர். ஆனால், எனக்கு அந்த இரண்டையும் செய்யக் கடினமாக இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கிடலில் இருந்தேன். அந்தக் கதாபாத்திரம் உணர்ச்சிவசப்படக் கூடியது என்பதால் நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து விலகியிருக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் அறையில் தனிமையிலிருந்தேன். சில நாட்களிலேயே என் தன்மை மாறியது. வீட்டில் அனைவரிடமும் எளிதில் கோபப்படும் சுபாவம் வந்தது” என்று தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.