பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது; இந்தியைத் திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: ரஜினி கருத்து

பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது; இந்தியைத் திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: ரஜினி கருத்து

சென்னை

எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்தும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷடவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.

எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை; தென் இந்தியாவில் எந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தித் திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தி திணிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்