தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை: மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை: மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கேட்டு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், இயந்திரங்கள் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது 2016ம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கால அவகாசத்தை தொடர்ந்து தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்தவேண்டும் என்றும், அதற்காக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரதா சாஹு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநில தேர்தலை ஆணையம் கேட்டுள்ளதா? என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது உள்ளாட்சி தேர்தலுக்காக ஈவிஎம் இயந்திரங்களை கேட்டு மாநில தேர்தல் ஆணையமானது, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது என்று தெரிவித்தார். அந்த கோரிக்கையை ஏற்று விரைவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் தேர்தலுக்காக எத்தனை ஈவிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது? மற்றும் எவ்வளவு இயந்திரங்கள் கொடுக்கப்படும்? போன்ற விஷயங்களை பின்னர் தெளிவாக விவரிக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல, விவிபேட் இயந்திரங்கள் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படாது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.